டிரம்ப் கோபுரம்
டிரம்ப் கோபுரம் என்பது, 58 தளங்களைக் கொண்டதும், 664 அடிகள் உயரமானதுமான ஒரு கலப்புப் பயன்பாட்டு வானளாவி ஆகும். இது, நியூயார்க் நகரத்தின் மிட்டவுன் மான்ஹட்டனில், 721-725 ஐந்தாம் அவெனியூவில், 56 ஆம் 57 ஆம் வீதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. டிரம்ப் கோபுரம், "தி டிரம்ப் ஆர்கனைசேசன்" என்னும் நிறுவனத்தின் தலைமையிடமாகச் செயற்படுகிறது. அத்துடன், இக்கோபுரம் உருவாக்கப்பட்டபோது, அதன் உடமையாளரும், வணிகரும், நிலஞ்சார் சொத்து மேம்பாட்டாளருமான, ஐக்கிய அமெரிக்க சனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூட்டுரிமைக் கட்டிட உச்சி வீடும் இக்கட்டிடத்தில் உள்ளது. டிரம்ப் குடும்பத்தைச் சேர்ந்த பலர் இக்கட்டிடத்தில் வசிக்கின்றனர் அல்லது முன்னர் வசித்துள்ளனர். "பொன்விட் டெல்லர்" என்னும் பல்பொருள் அங்காடி நிறுவனத்தின் சிறப்பு அங்காடி ஒன்று முன்னர் இருந்த நிலத்திலேயே இக்கோபுரம் அமைக்கப்பட்டது.




